|

ஜனவரி
ஆண்டு துவக்கத்திலேயே சிங்கப்பூர் ஜனநாயக கட்சி (சி.ஜ.க) உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கண்டித்துத் துண்டறிக்கை விநியோகம் செய்தனர் என்ற கூற்றின்படி வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அதன்பின் சில நாட்களில் செயல் வீரர்களான சீலன் பாலேயும் சொங் காய் சியோங்கும் மனிதவள அமைச்சின் வெளியே ஆர்பாட்டம் செய்தனர் என்று கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவளித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.
ம.செ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொகுதிவாசி ஒருவரால் தாக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் அதே உறுப்பினர் முன்பு ஒருமுறை தாக்கப்பட்டார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
சட்ட ஆண்டின் துவக்கத்தில் உரை நிகழ்த்தியவர்கள் சிங்கப்பூரில் சட்டவிதிகள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றன என்று பேசினர். இக்கூற்று தவறானது என்று டாக்டர் சீ சூன் ஜூவான் கருத்துரைத்தார்.
தொடர் நிகழ்வாக, 2007-ம் ஆண்டு ஆர்ச்சட் சாலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற குற்றத்திற்காக சி.ஜ.க. உறுப்பினர்கள் மீது விசாரணை தொடரப்பட்டது.
பிப்ரவரி
ஆண்டு நிதி அறிக்கை மீதான விவாத நேரத்தின்போது நமது கட்சி 5-அம்ச மாற்றுத் திட்டத்தை முன் வைத்தது. அவற்றில் சிலவற்றை பின்பு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பற்றுச்சீட்டு விநியோக முறையை CapitaLand நடைமுறைபடுத்தியது. இது சி.ஜ.க.-வின் பரிந்துரை என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது.
இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு சி.ஜ.க. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட அழைக்கப்பட்டனர்.
தெமாசிக் ஹோல்டிங்க்ஸ் என்ற அரசு நிறுவனம் 50-பில்லியன் வெள்ளி இழப்புக்கு ஆளாகியுள்ளது என்ற திடுக்கிடும் செய்தியை வெளியிட்டது. இந்த இழப்புக்கு நமது மதியுரை அமைச்சர் பொறுப்புதாரர் என்று டாக்டர் சீ. கருத்துரைத்தார்.
2006-ம் ஆண்டு உலக வங்கியின் கூட்டத்ததொடரின்போது ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் முழு விழிப்பு நிலையில் இருந்ததாக காவல்துறையினர் வழக்கு மன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் நடந்ததோ வேறு! அச்சமயத்தில் ஹொங்லிம் பூங்கா அருகில் ஒரு கொலை நடந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. அரசு சார்ந்த பத்திரிக்கை ஒன்று திரு சியாம் சீ தோங்க்
அவர்கள் சி.ஜ.க.-கட்சியிலிருந்து வெளியான சூழ்நிலை குறித்து "தூசிதட்ட" எண்ணி மறுபேட்டி ஒன்றை வெளியிட முனைந்தது. இந்த முயற்சி ஜனநாயகவாதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. "டுடே" என்ற அந்தப் பத்திரிக்கையும் பேட்டி என்று கூறிக்கொண்டதை வெளியிடவில்லை.
மார்ச்சு
டாக்டர் சீ எழுதிய கடிதத்தை வெளியிட்டதற்காக Wall Street Journal என்ற பத்திரிக்கை நீதித்துறையை அவமதித்ததாக தண்டிக்கப்பட்டது.
கட்சியின் எதிர்காலம் குறித்தும் வரும் பொதுத் தேர்தல் குறித்தும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்றுகூடி கலந்துரையாடினர். திரு லீ யின் கட்டுப்பாட்டில் ஒரு தேசம் (One Nation Under Lee) என்ற இணையத்தில் உள்ள அறிக்கை You Tube வழி சுமார் 40,000 பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
ஏப்ரல்
நமது நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளியல் மீட்பை எதிர்பார்த்து ஆளும் ம.செ.க காத்திருப்பது குறித்து நமது கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் அமைப்பான AWARE என்ற அமைப்பு பல குழப்பங்களைச் சந்தித்து இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்திற்கு ஆளானது.
நமது கட்சித் தலைவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று மாணவர்களுடன் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினர். கட்சி அறிக்கையையும் விநியோகம் செய்தனர். இது பெரும் வரவேற்பை பெற்றது. நமது இந்த இணைய தளமும் மேம்பாடு கண்டு சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் அறிமுகம் கண்டது.
மே
மே தின வாழ்த்துச் செய்தி நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. மக்கள் செயல் கட்சி (ம.செ.க) தொழிலாளர்கள் உரிமைகளை மதிக்கவேண்டும் என்றும் தொழிலாளர்களின் ஊதியத்தில் உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும் என்றும் சி.ஜ.க. கருத்துரைத்தது. மே தினத்தின் ஒருவாரத்திர்குப் பிறகு காவலில் இருந்து தப்பிய மாஸ் சிலாமாட் கைது செய்யப்பட்ட செய்தி மலேசியா காவல் துறையால் வெளியிடப்பட்டது.
ஆளுங்கட்சியை எதிர்த்து செயல்பட எதிர்கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். செல்வி சி சியோக் சின் (Ms Chee Siok Chin) எல்லா சமூக அமைப்புகளும் ஜனநாயக மேம்பாட்டுக்கு எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
1987-ம் ஆண்டு “மார்க்சிஸ்ட்" (Marxist) என்று கைதானவர்களை நினைவு கூறும் வகையில் 22-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ம.செ.க-அரசு தொகுதி சாரா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைகளைக் கூட்டுவது குறித்து அறிவித்தது கேலி கூத்தான ஒன்று என்று வர்ணித்த சி.ஜ.க., தேர்தல் முறையை ஜனநாயகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றத்தில் ம.செ.க உறுப்பினர்கள் அரசு பன்னாட்டு நிறுவனங்களைவிட உள்நாட்டு சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று நாடகமாடினர். இக்கருத்தையே சி.ஜ.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
"தாங்க முடியலப்பா"(Tak Boleh Tahan) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரு சியா தி லிக் (Chia Ti Lik) குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் அடிப்படையாக அமைந்த கொள்கைகள் அத்துமீறப்படும்போது குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார்.
ஜூன்
கட்சி நண்பரும் ஆலோசகருமான திரு அந்தோனி இயோ (Anthony Yeo) அவர்களின் மறைவு பேரிழப்பானது. திரு சீலன் பாலே அவர்கள் லீயின் கட்டுப்பாட்டில் ஒரு தேசம் (One Nation Under Lee) வெளிப்பாடு குறித்து விசாரிக்கப்பட்டார். நீதிபதி தோயோங் சீயோங் (Toh Yung Cheong) அவர்கள் டாக்டர். சீக்கு கைதாணை பிறப்பித்தார். டாக்டர் சீ தனது மாமனாரின் ஈமச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதியின்றி தைவான் சென்றது குற்றமாகக் கொள்ளப்பட்டது. பின்னர் இக்கைதாணை மீட்டுக்கொள்ளப்பட்டது.
ஜூலை
எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியினரால் விமரிசிக்கப்படுவது கண்டிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியின் அவசியம் குறித்துக் கருத்துரைக்கப்பட்டது.
தெமாசிக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஹோ சிங்(Ho Ching) அவர்கள் விலகுவது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது. "சுதந்திரமாக கருத்துரைக்க" ஏற்படுத்தப்பட்ட ஹோங் லிம் (Hong Lim Park) பூங்காவில் கண்காணிப்புக் கருவிகள் பொறுத்தப்பட்டன.
சி.ஜ.க.-வின் மாநாட்டில் கட்சியின் விரிவாக்கம் குறித்து டாக்டர் சீ விளக்கம் அளித்தார். புதிய உறுப்பினர்கள் நிறுவாகக் குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட்
இளம் ஜனநாயகவாதிகள் புதிய தலைமைத்துவத்தைப் பெற்றனர். வெளிவிவகார அமைச்சர் திரு ஜார்ஜ் இயோ அவர்களுடன் பலதரப்பட்ட கருத்துகள் குறித்து விவாதம் எழுப்பப்பட்டது. குறிப்பாகக் கணினியில் இடம் பெற்றுள்ள ‘Facebook’ குறித்த சர்ச்சையைக் கிளப்பினர். அமைச்சர்களின் சம்பளம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. Youtube இணையதளத்தில் முதன்முறையாக தேசியதின செய்தி நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இணையதளத்தின் வழி விவாதம் புரிய ஆளுங்கட்சி அழைக்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோல் ஆளுங்கட்சி தயாராக இல்லை. உறுப்பினர் திரு வோங் யூ வென் (Wong Yew Wen) அவர்களால் காது கேளாதவர்களுக்கும் தேசிய தின செய்தி வழங்கப்பட்டது.
செப்டம்பர்
பொது இடத்தில் அனுமதியின்றிப் பேசியதற்காக டாக்டர் சீக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கணினியில் Youtube இணையத்தின் வழி சுமார் 250,000 பேர் சிங்கப்பூர் புரட்சிக்காரர் (Singapore Rebel) என்ற செய்தியைப் பார்த்தும் படித்துவிட்டனர் என்பதை அறிந்த அரசு அதற்கு விதிக்கப்பட்ட தடையை மீட்டுக்கொண்டது. திரு சீலன் பாலே அவர்கள் திரு பிரான்சிஸ் சியாவ் (Francis Seow) அவர்களுடனான பேட்டியைத் தணிக்கைக் குழுவிற்குத் தரம்பிரித்து வழங்க அனுப்பி வைத்தார்.
சி.ஜ.க கட்சியின் தலைவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய சந்திப்புக் கூட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனைக் கண்ட NTU நிர்வாகத்தினர் கூட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் பலர் பேச்சாளர் சதுக்கத்தில் கூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சமய விழாக்கள் குறித்த செய்திகள் ஒளிநாடாவின் வழி வெளியிடப்பட்டது. திரு ஜூப்ரி முஹமது வின் "ஹரிராயா" வாழ்த்துரை முதலில் ஒளிபரப்பப்பட்டது.
மியன்மாரின் பணம் சிங்கையில் குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வீடமைப்பு வாரியத்தின் வீடுகளின் விலை 38% உயர்ந்தது. நிரந்தர குடிவாசிகள் 40% வீடு விற்பனைகளுக்குப் பொறுப்பாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் மக்கள் தொகை 5 மில்லியனை எட்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இதில் 38% வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது கட்சி செய்தித்தாள் விற்பனை இராண்டுக்குப்பின் மீண்டும் துவங்கப்பட்டது. அரசு முதலீட்டு நிறுவனமான (GIC) 59 பில்லியன் வெள்ளீ இழப்புக்கு ஆளான செய்தியை அரசு வெளியிட்டது.
அக்டோபர்
நமது கட்சி உறுப்பினர்கள் நீதிபதி ஜோன் இங் (John Ng) அவர்களால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். இது இணையத்தில் பெரும் பரபரப்பான செய்தியானது இருப்பினும் அரசு தரப்பில் மேல் முறையீடு செய்துள்ளனர். புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக சந்தை பிரச்சனையில் நமது கட்சி துணை நின்றது. விவாதங்களில் கலந்து கொண்டதோடு செங் சியோங் அங்காடி நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டத்திற்கு அனுமதி கேட்டுக் கடிதம் எழுதியது. கூட்டத்திற்கு வர மறுத்தது அந்த அங்காடி.
செல்வி N கோகிலவாணி கட்சியின் தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டார். முதன்முறையாக "வாருங்கள் பேசலாம்" என்ற ஒளித்தொடர் தொடங்கப்பட்டது.
நவம்பர்
டாக்டர் சீ அமெரிக்காவின் பல வானொலி தொடர் பேச்சுகளில் கலந்துகொண்டார். அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூரின் பொருளாதார வாய்ப்புகளை சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதைக் கண்டித்துப் பேசினார். சி.ஜ.க.-வின் வழக்குரைஞர் திரு போப் ஆம்ஷ்டர்டாம் (Mr Bob Amsterdam) அவர்கள் அடக்குமுறை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். தடுப்புக்காவல் (ISA) சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட டாக்டர். லிம் ஹொக் சியு (Dr. Lim Hock Siew) தமது அனுபவத்தை பாஜார் பரம்பரையினர் (The Fajar Generation) நூல் வெளியீட்டின் போது நம்மோடு பகிர்ந்து கொண்டார். சி.ஜ.க. லிப்ரல் இன்டர்நேசனல் என்ற அனைத்துலக அமைப்பில் அங்கம் பெற்றது.
டிசம்பர்
ம.செ.க தேர்தல் சமயத்தின்போது வாக்களிப்பு நாளுக்கு முன் தினம் பிரச்சாரம் எதுவும் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க இது வாய்ப்பளிக்கும் என்று கருத்துரைத்தது. டாக்டர் சீ யின் மீது கொண்டுவரப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளில் மூன்று மீட்டுக்கொள்ளப்பட்டது.
அரசை கண்டித்து துண்டறிக்கைகள் விநியோகம் செய்ததற்காக சி.ஜ.க தலைவர்கள் நிதிபதி சிங் (Judge Ching) என்பவரால் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு ஊழியர்களின் வரவினால் சிங்கப்பூரர்கள் பாதிப்புறுவதற்கு சிங்கப்பூரரே காரணம் என்று மதியுரை அமைச்சர் திரு லீ கூறியதைக் கண்டித்து நம் கட்சி அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஆண்டு ஒரு பயனுள்ள ஆண்டாக அமைந்தது. அதுபோல இந்த ஆண்டும் அமையும் என்று நம்புகிறோம். இதனை கருத்திற்கொண்டு எங்களுடன் இணைந்து செயல்பட வாரீர்.
அனைவருக்கும் எங்களின் பொங்கல் வாழ்த்துகள்
|