1. சிங்கப்பூரில் ஏற்புடைய ஜனநாயக முறையை நடைமுறைபடுத்த எதிர்¢கட்சிகள் நாளும் போராடி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இது எதிர்கட்சிகளின் போராட்டம் என்று நீங்கள் வாளாவிருக்கக்கூடாது. சிங்கப்பூரர் அனைவரும் எங்களின் போராட்டம் வெற்றிபெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். உங்களின் ஒத்துழைப்பு இல்லையேல் ஜனநாயக ஆட்சிமுறை என்பது வெறும் பகல் கனவே!
2. எதிர்கட்சிகள் எங்களுக்கு என்ன செய்யமுடியும்? என்று கேள்வி கேட்பதை விட்டு விட்டு எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன்வாருங்கள். சேவைக்கு ஏற்பத் தான் வாக்கு என்ற சிந்தனைப் போக்கு மாறவேண்டும். வாய்ப்புக் கொடுத்தால்தானே சேவை செய்யமுடியும். உங்களின் ஒத்துழைப்பு இல்லையேல் வாய்ப்புக் கிடைப்பது எப்படி?
அச்சுறுத்தலையே அரசியல் பலமாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாட்டில் எதிர்கட்சிகள் வெற்றி பெறுவது என்பது இயலாத ஒன்று. எதிர்கட்சிகளுக்கு உதவவே அஞ்சுகின்ற சமுதாயத்தில் சரியான வேட்பாளர்களைப் பெறுவது என்பது கடினமே. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இதனால் தகுதியற்ற வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துவோம் என்று சொல்லவில்லை. எங்களின் போராட்டம் உங்கள் எதிர்காலத்திற்காக என்பதை மறவாதீர்கள். நமக்கென்ன என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது போதும் ஒத்துழைப்புக் கொடுக்க முன் வாருங்கள். இதுவரை ஆளுங்கட்சி பெற்று வந்த வெற்றிக்கு மக்களின் அமோக ஆதரவுதான் காரணம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். மக்கள் எதிர்கட்சிகளின் போராட்டம் மக்களுடைய நன்மைக்காகத் தான் என்பதை மறந்ததால் வந்த விளைவே இந்த வெற்றி.
மறைந்த அமெரிக்க அதிபர் கென்னடியின் கூற்றைச் சற்று நினைவு கூறுங்கள்....
“நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதீர்கள். நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேளுங்கள்!”
எனவே வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல் உங்களால் முடிந்ததை செய்ய முன் வாருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றென்றும் தேவை.
இன்றைய அரசியல் சூழல் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாங்களும் புத்தாக்கச் சிந்தையோடு போராடத் திட்டமிட்டுள்ளோம். எங்களின் வெற்றி உங்களின் வெற்றி. எனவே இனியும் தாமதிக்காமல் உதவ முன் வாருங்கள் நன்கொடைகளை அள்ளித் தாருங்கள். திறமையும் தகுதியும் உள்ளவர்களுக்குக் கட்சியில் இடமுண்டு என்பதை மறவாதீர்கள்.
வாருங்கள்! வாருங்கள்! எங்களின் போராட்டம் உங்களின் போராட்டம்! எங்களின் வெற்றி உங்களின் வெற்றி!
|