|
சிங்கப்பூர் ஜனநாயகவாதிகள்
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) என்றென்றும் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு சக்தியாக விளங்கிவருகிறது. அதனால்தான் இளம் ஜனநாயகவாதிகள் என்று ஓர் அமைப்பை எங்களால் உருவாக்க முடிந்தது. எதிர்கட்சிகளுக்கிடையே இது ஒரு புதிய முயற்சி. முதல் எதிர்கட்சி இத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நமது இளம் ஜனநாயகவாதிகள் அமைப்பு மேலும் மேலும் இளமையாக உருவெடுத்து வருகிறது. இன்று 15 வயது பள்ளி மாணவன் ஒருவன் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணத்திலும் இதழ் விற்பனையிலும் கலந்துகொண்டு ஆதரவு அளித்துள்ளான். அவனது ஈடுபாடு அனுபவம் பெற்ற ஒரு கட்சித் தொண்டனின் சேவைக்கு இணையாக இருந்தது. அவன் மிகவும் ஆர்வத்தோடு பொதுமக்களை அணுகி இதழ் விற்க முற்பட்டது எங்களை பிரமிக்கச் செய்தது.
அவன் ஓர் இளைஞனாக இருந்தாலும் அரசியல் நிலவரத்தையும் நாட்டு நடப்பையும் நன்கு அறிந்திருந்தான். அவன் மற்ற சக பள்ளி மாணவர்களிடம் ஜனநாயகக் கட்சியின் இதழில் வரும் செய்திகள் குறித்துக் கலந்துரையாடி இருப்பது கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மாணவனின் துணிகரச் செயல் எங்களுக்கு வியப்பைத் தரவில்லை. ஏனெனில், இன்றைய பள்ளி மாணவர்களில் பலர் பள்ளி ஒப்படைப்புகளுக்காக எங்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தலைவர்களைப் பேட்டி கண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் அரசியல் தலைப்புகளைத் தவிர்க்கும்படி கூறியும் மாணவர்களது ஈடுபாடு பெரிதும் மனநிறைவை அளிக்கிறது.
இன்றைய இளைஞர்கள் நாட்டில் நிலவி வரும் அடக்குமுறை அரசியலையும் சுதந்திரம் இன்மையையும் நன்கு கவனித்து வருகின்றனர். இதனை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கின்றோம்.
இன்றைய இளைஞர்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்டுவரும் போராட்டங்களை நன்கு கவனித்து வருகின்றனர். அதனால்தான் நமது கட்சியின் இளம் ஜனநாயகவாதிகள் மாணவர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு தோன்றும் வகையில் செயல்பட முனைந்துள்ளனர். இது நல்லதொரு எதிர்காலத்திற்கு வித்திடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இணைய தளத்தின் வருகை கட்சியின் பணியை மிகவும் சுலபமாக்கியுள்ளது. தகவல்கள் வெகுவிரைவில் பொதுமக்களை சென்று சேர இணைய தளம் பேருதவியாக உள்ளது. இதனால்தான் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இணையத்தை பெரிதும் பயன்படுத்தி வருகிறது.
கட்சியின் போராட்டங்கள் மக்களின் அன்றாட தேவைகளை மையமாகக் கொண்டிருந்த போதிலும் இன்றைய இளைய தலைமுறையினரின் கவனம் ஜனநாயக உரிமைகளை மையமாகக் கொண்டது என்பதையும் அறியும்.
இன்றைய நமது அரசியல் சூழ்நிலையின் காரணமாக பல இளம் தலைமுறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால்தான் பலர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இது ஒருபோதும் நல்ல தீர்வாகாது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
சிங்கப்பூரின் எதிர்காலம் நமது கைகளில் தான் உள்ளது. அதனை நிர்ணயிக்கும் உரிமை நம்முடையதே. ஜனநாயகக் கட்சி நமது இளம் ஜனநாயகவாதிகள் அமைப்புடன் ஒன்றுகூடி எதிர்காலத்தை நன்முறையில் திருத்தி அமைக்க போராடி வருகிறது.
அனைத்துச் சிங்கப்பூரரும் ஒன்றிணைந்து செயல்பட வாருங்கள்!
|