|
சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்
சிங்கப்பூர் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, அண்மையில் மீண்டும் தலையங்கங்கள் எழுத முனைந்துள்ளோம் என்று அறிவித்து, தன் முதல் தலையங்கத்தை இம்மாதம் 05-05-2009 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
முரசொலி என்று தலைப்புக் கொடுத்து 'வருங்கால சந்ததிக்கு தீபம் ஏற்றுவோம்' என்ற தலையங்கத்தை வெளியிட்டது.
எதிர்பார்த்ததைபோல் இத்தலையங்கம் மக்கள் செயல் கட்சி (ம.செ.க.) அரசாங்கத்துக்கு துதி பாடியது. குறிப்பாக அதில் மிகச் சிறுபான்மையினரான தமிழர்கள் புரிந்துகொண்டால் பலன் என்று அறிவுரை கூறியது. இத்தகைய அரை வேக்காட்டு 'போதனை', சிங்கப்பூரின் இறையாண்மையை புரியாமலேயே செயல்படுவதாகும்.
அரசியலமைப்புச் சட்டம் 12ஆம் பிரிவின் கீழ் சிங்கப்பூர் குடிமக்கள் யாவரும் 'சமம்'. மதத்தாலோ - இனத்தாலோ குடிமக்களிடையே எந்தவித வேற்றுமையையும் உண்டாக்கக் கூடாது.
தற்போது மதிவுரை அமைச்சராக இருக்கும் திரு. லீ குவான் யூ, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி சுதந்திர நாடாக 1965 ஆகஸ்ட் 9ஆம் நாள் பிரகடனப்படுத்தியது யாதெனில்:
'நான் என் வயது வந்ததிலிருந்து சிங்கப்பூரை, மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்று பாடுபட்டேன்."
தொலைக்காட்சியில் அழுது கொண்டே தொடர்ந்து கூறினார்: "ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை."
சிங்கப்பூர் 1963லிருந்து 1965 வரை மலேசியாவின் ஒரு மாநிலமாக இருந்தபோது, சிங்கப்பூரின் அப்போதைய பிரதமரான திரு. லீ , 'மலேசியன் மலேசியா' என்ற முழக்கத்தை முன்வைத்தார். அந்தக் கூற்றின்படி மலேசியா, 'எல்லா மலேசியர்களுக்கும்' சொந்தமான நாடு. அது ஒரு மொழியையோ - ஓர் இனத்தையோ சார்ந்த நாடு அல்ல. அதாவது, 'எல்லா இனத்தவர்களுக்கும் - மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்ற இனத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு 'மலேசியன் மலேசியா' என்ற போராட்டத்தை முன்வைத்து திரு. லீ செயல்பட்டார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக1965ல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது. திரு. லீ குவான் யூ, தொலைக்காட்சியில் சிங்கப்பூரை சுதந்திர நாடாக
பிரகடனப்படுத்தி உறுதி கூறியது என்னவென்றால்:
'மலேசியன் மலேசியாவை உருவாக்குவதில் நாம் வெற்றிபெறவில்லை. ஆனால், ஒரு சிங்கப்பூரியன் சிங்கப்பூரை உருவாக்கப்பாடுபடுவோம்.
'அத்தகைய சிங்கப்பூர், ஒரு சீனர்களின் சிங்கப்பூரோ - ஒரு மலாய்க்காரர்களின் சிங்கப்பூரோ - ஓர் இந்தியர்களின் சிங்கப்பூரோ இல்லாது, எல்லா சிங்கப்பூரர்களையும் சார்ந்த நாடாக இருக்கும்' என்று திரு .லீ அன்று சூளுரைத்தார்.
மேலும் அவர் சிங்கப்பூரில், 'திறமைக்குத்தான் முக்கியத்துவமே தவிர வேறு எதர்க்கும் அல்ல." என்றார்.
இங்கே ஒரு முக்கிய நிகழ்வை குறிப்பிடவேண்டும். சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபொழுது மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டு,சிங்கப்பூர் ஜாலான் பெசார் திடலில் அலைகடலென திரண்டிருந்த தமிழ் மக்களிடையே, "ஒரு மொழி - ஓர் இனம்; மற்ற மொழிகளின் மேலோ - இனத்தின் மேலோ ஆதிக்கம் செலுத்தக்கூடாது" என்று அறிஞர் அண்ணா கூறினார். அந்தக் கூட்டத்தை வழி நடத்தியவர் அன்று கலாச்சார அமைச்சராக இருந்த திரு. எஸ். இராஜரத்தினம் அவர்கள். திரு. லீ அவர்களும் அக்கூட்டத்தில் உரையாற்றினார்.
பேரறிஞர் அண்ணாவின் இக்கருத்தை சிங்கப்பூர் மானில அரசு, "மலேசியன் மலேசியா" என்னும் புத்தகத்தை வெளியிட்டு அதில் படத்துடன் அண்ணாவின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது.
இந்த பின்னணியில் நோக்கும் பொழுது, அரசாங்கத்தின் ஊதுகுழலாக இயங்கும் தமிழ் முரசின் தலையங்கம் கண்டிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க.) நம் நாட்டின் அரசியல் சாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த மதத்துக்கும் - இனத்துக்கும் - மொழிக்கும் அப்பாற்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இயங்குகிறது. எங்கள் கட்சியின் தலைமைத்துவம் இந்த அடிப்படைக் கொள்கையை மக்களிடம் பறை சாற்றும் முகமாக இயங்குகிறது.
தமிழ் முரசு, அரசியல் பின்னணி தெரியாததாலோ அல்லது அரசியல் இருட்டடிப்பின் காரணமாகவோ, சிங்கப்பூர் தமிழர்களிடம், "மிகச் சிறுபான்மையினரான தமிழர்கள் புரிந்துகொண்டால் பலன்" என்று கூறும் தலையங்க அறிவுரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிங்கப்பூர் மக்களை பாதிக்கக்கூடிய எல்லா மக்கள் விரோத ம. செ. க. அரசாங்க போக்கைக் கண்டிப்பதற்கு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி என்றுமே தயங்கியதில்லை. இந்த அடிப்படையில் எங்கள் கட்சி சிங்கப்பூர் மக்களுக்கு செயல்முறையிலும் மற்ற வழிகளிளும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு போராடத் தயங்காது.
|